Saturday, January 9, 2010

இங்கே நில உடமைதான் எல்லவற்றையும் தீர்மானிக்கிறது

தமிழக தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் வட இந்திய தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. எல்லோரும் ஒன்று என்பவர்கள் உண்மையை அறியாதவர்கள் அல்லது அறிந்தே மறைப்பவர்கள். தமிழகத்தில் மூன்று தாழ்த்தப்பட்ட சாதிகள் பெரும்பான்மையாக அறியப்பட்டுள்ளன. பள்ளர் பறையர் மற்றும் சக்கிலியர். இவர்களில் சக்கிலியர் மேற்சொன்ன மற்ற இரு தாழ்த்தப்பட்ட சாதிமக்களாலேயே தாழ்த்தப்பட்டவர்களாகவும் தீண்டத்தகாதவர்களாகவும் கருதப்படுபவர்கள். படி நிலையில் அரசியல் சமூக தளங்களில் மிகவும் கீழான நிலையில் இருப்பவர்கள். இந்த மூன்று மக்களுமே ஒரே நிறையில் வராத போது வட நாட்டு தாழ்த்தப்பட்டவர்கள் எப்படி ஒரே தட்டில் வருவார்கள்? என்கிற போது தலித் என்ற சொல்லின் பொருத்தப்பாடு கேள்விக்குள்ளாகிறது.

இங்கே நில உடமைதான் எல்லவற்றையும் தீர்மானிக்கிறது. தமிழகத்தின் தென்பகுதி மாவட்டங்கள் மற்றும் எங்கள் பகுதியான திருச்சி கரூர் பகுதிகளில் எல்லாம் பள்ளர் இன மக்களிடம் நிலம் உள்ளது. வட பகுதி மாவட்டங்களான ஆற்காடு கடலூர் விழுப்புரம் பகுதிகளில் எல்லாம் பறையர் அல்லது ஆதிதிராவிடர் என குறிக்கப்படும் இன மக்களிடம் நிலம் உள்ளது. இதனாலேயே இவர்கள் இருவராலும் அரசியல் இயக்கங்களை முன்னெடுத்துச்செல்ல முடிகிறது. இந்தப்பகுதிகளில் உள்ள தம்மை ஆதிக்கசாதியினராக கருதிக்கொள்ளும் சாதியினரிடம் போராட்ட குணத்தோடு எதிர்த்து நிற்க முடிவதற்கு ஆதரவாக இருப்பது ஒரளவிலான அவ்ர்களின் பொருளாதார சுயசார்புதான். நிலமே இல்லாத கூலிகளாகவே அடிமைகளாகவே காலத்தை கழிக்கிற சக்கிலிய இன மக்கள் அரசியல் அனாதைகளாக உள்ளனர். அவர்களால் நிமிரவே முடிவதில்லை. இந்த நிலையில் இந்த மூன்று மக்களையும் இணைக்கிற விதமாக எந்த தாழ்தப்பட்டவர்களின் அரசியல் இயக்கமும் தம்து செயல் நோக்கை வைத்துக்கொள்வதில்லை. காரணம் அவர்களுக்குள்ள சாதிய பற்றுதான்.

இந்த நிலையில் எந்தச் சாதியானாலும் ஒடுக்கப்படுகிற எல்லா மக்களையும் இணைக்கிற ஒரு குடை உன்டென்றால் அது வர்க்கம் சார்ந்த போராட்டம் தான். தாழ்த்தப்பட்ட சாதியினருக்கான அரசியல் இயக்கங்கள் போராடி உரிமைகளைப்பெறுவதாக கருதினாலும் அது அவர்களின் ஒரு சாராருக்கே முன்னேற்றம் தரும். இட ஒதுக்கீட்டில் படித்து அதிலேயே வேலை வாங்கி நகர்ப்புறங்களில் வசதியான வாழ்வோடு தமது சாதிய அடையாளங்களை வசதியாக மறந்து விடுகிற ஒரு வர்க்கம் உருவாகி விட்டது. இந்த விபத்து தான் சாதிய ஒழிப்புப் போராட்டங்களின் முதல் சறுக்கல். சாதிய ஒழிப்பு என்பது ஒரு சாதியினருக்கு உரிமைகள் பெற்றுத்தருவதோ சமூகத்தில் அவர்களின் மதிப்பைக் கூட்டுவதோ அல்ல. சாதியை மறைப்பதாலேயோ ம்றுப்பதாலேயொ சாதி ஒழிந்து விடப்போவதில்லை. வர்க்கங்கள் ஒழிகின்ற போதுதான் சாதி ஒழியும். வர்க்கங்கள் ஒன்று என்றாகிற போது சாதியே அங்கே இருக்காது. மதமும் தேவை இல்லை. தோழர் லெனின் சோவியத்தை நிர்மாணித்த பின்னர் சர்ச்சுகளையா கொளுத்தினார்? எல்லம் சமம் என்கிற ஒரு பொன்னுலகை படைத்து முன்னால் காட்டும் போது அவர்கள் அதுகாறும் நம்பி வந்த கடவுள் சாதி மதம் என்ற அடையாளங்கள் தேவையற்றுப்போகும்.



Friday, January 1, 2010

எஸ். பி. ஜன நாதனின் பேராண்மை

சமீபத்தில் வெளிவந்திருக்கும் எஸ். பி. ஜன நாதனின் பேராண்மை என்கிற தமிழ்த்திரைப்படம் பரவலான கவனிப்பைப் பெற்றுள்ளது. பல்வேறு தரப்பினராலும் பல கோணங்களிலான விமர்சனங்களோடு இந்தப் படம் முன்னெடுத்துச் செல்லப் படுகிறது.
இன்றைய தமிழ்த்திரையுலகம் முற்றிலும் வணிகமயமாக்கப்பட்ட ஒன்று. ஏகாதிபத்திய முதலாளித்துவ அடிமையான இந்தியா முழுமையிலும் திரைத்துறை கடுமையான தணிக்கைகளுக்கு உட்படுத்தப் பட்டு ஆளும் வர்கத்துக்கான தொண்டுமுட்டி போலவே இருந்து வருகிறதான சூழலில், முற்போக்கு சிந்தனையுள்ள சில படங்கள் வெகு அரிதாகவே வருகின்றன. அந்த வகையில் பேராண்மை மிகவும் கவனிக்கத்தக்க பட்மாக உள்ளது. இயற்கை, ஈ, போன்ற முந்தைய படங்களின் தகுதியால் ஜெயம் ரவியின்
இல்லாமல் எஸ். பி. ஜன நாதனின் பேராண்மையாக வந்துள்ளது. அதற்காக எஸ். பி. ஜன நாதனுக்கு எமது வாழ்துக்களும் பாராட்டுக்களும்.
திரைப்பட இலக்கணங்கள் தெரிந்த எவரும் இந்தப் படத்தை அதன் உருவாக்கம், காட்சியமைப்பு மற்றும் தொழில் நுட்ப நேர்த்தி இவற்றுக்காக பாராட்டிவிட முடியாது. வழக்கமான அளவுகோல்களின்படி ஒரு கலையனுபவத்தை நீங்கள் இந்தப் படத்தில் எதிர்பார்க்க முடியாது. ஆனால் இந்த மேம்போக்கான அலங்காரங்கள் இல்லாமலேயே, சமூக மாற்றத்துக்கான
பெரும் போராட்டத்தில் இந்தப் படம் எப்படி ஒரு முக்கிய பங்களிப்பாக இருக்கும் என்பதை தொட்டுக்காட்டுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். வாட்டக்குடி இரணியன் என்று பெயர் கூட வைக்க முடியாத தமிழ்த்திரையுலகில், “உழைக்கும் மக்களின் சர்வாதிகாரத்தை ஒரு நாள் பாக்கத்தாண்டா போறீங்க” என்ற குரல் ஓங்கி ஒலித்திருக்கும் இந்தப் படம் வழக்கமான அளவுகோல்களுக்கு அப்பாற்பட்டது. தாய்ப்பாலுக்கு சர்க்கரை தேவையா நண்பர்களே?. ஒடுக்கப்பட்ட மக்களின் புதிய இலக்கியங்களில் இலக்கண இலக்கிய நேர்த்திகளைத்தேடும் தமிழ்வாத்தியார்த்தனத்தோடு இந்தப்படத்தில் அழகியலைத் தேடாதீர்கள். இந்தப்படம் இறுதியல்ல. இனிவரும் படங்களுக்கான முன்னோட்டம். அந்த வகையில் இந்தப் படத்திலிருந்து புதிய அழகியலுக்கான அளவுகோல்களை உருவாக்க வேண்டுமே தவிர, ஏற்கனவே உள்ள அல்லது எங்கோ பரிணமித்த அழகியல் அளவுகோல்களால் நமது சொந்தக் கலைப்படைப்புகளை எடை போடுவது சரியானது அல்ல.
ஏற்கனவே சீரழிந்து கிடக்கிற தமிழ் சினிமாவில் இந்த வரைக்குமாவது வந்ததே என்கிற சமாளிப்பு வாதமும் இந்தப் படத்துக்குப் பொருந்தாது. சமூகத்தின் அடித்தட்டு மக்கள் எந்த அளவு வரை மேல்தட்டு வர்க்கத்தினரால் சுரண்டப்பட முடியும் என்பதை இயக்குனரின் ஈ படம் அதீத எளிமையோடு இயல்பு மாறாமல் அந்த அடித்தட்டு மக்களிடமே கொன்டு சேர்த்தது. மணிரத்னம் சங்கர் வகையறாக்களின் குயுக்தியான பொதுமைப்படுத்தலால் சமூக மேம்பாட்டுக்கான எதிரிகளாக தவறாக அடயாளம் காட்டப்பட்டவர்களை விடுத்து உண்மையான எதிரிகள் யார் என்பதை அறுதியிட்டுச் சொல்கிறது இந்தப் படம். அதுபோக நடுத்தர வர்க்க போலி அறிவுஜீவிகளின் முற்போக்கு முகமூடியை அவர்களாகவே கிழித்தெறிய அல்லது புணரமைப்பு செய்து கொள்ள தூண்டுதலாக இந்தப் படம் அமைகிறது. இந்தப் படத்திலும் மணிரத்ன சங்கர போதையை தரிசிப்பவர்கள் மீட்கவே முடியாத அளவுக்கு சீரழிந்து கிடக்கிறார்கள் என்பது தெளிவு.
இந்தப் படமானது பல்வேறு குறியீடுகளால் நிரம்பியுள்ளது. தெளிவான அரசியல் பார்வை உள்ளவர்களின் கண்களுக்கு புலப்படுகிற மாதிரியான அந்தக் குறியீடுகளே நுனிப்புல் மேய்பவர்களின் வாய்க்கு அவலாகக் கிடைத்து விட்டன. ஆரம்ப மற்றும் இறுதிக்காட்சிகளில் வரும் இந்தியா என் தேசம் அதைக்காக்க என் உயிரையும் தருவேன் என்கிறதான வசனங்கள் மணிரத்னமோ சங்கரோ அர்ஜுனோ வைத்தால் அதன் அர்த்தம் வேறு. ஜன நாதன் என்கிற தேர்ந்த மார்க்சியவாதியின் வார்த்தைகள் அவை என்னும் போது அவைகளின் அர்த்தம் வேறு. அந்த வசனங்கள் குறிப்பிடுவது நேரு குடும்பத்தால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆளப்பட்டு வரும் இந்தியா அன்று. நாமெல்லோரும் கனவு காண்கிறபடி புதுமையான ஒரு பொதுமையான சமூகக் கட்டமைப்பை ஏற்படுத்த புவியியல் ரீதியாக ஒரு நாடு தேவை. ஒட்டு மொத்த உலகத்தையும் மாற்றுவதற்கு காலம் ஆகும். எனவே இந்தப் படத்தில் வருகிற இந்தியா எதிர்வரும் புதிய சமுதாயத்தின் வார்த்தை வடிவம். அதைக்காக உயிரையும் கொடுப்பது சமூக மாற்றத்தை விரும்புகிறவர்களின் கடமை. கதையின் முக்கியப் பாத்திரத்தின் பெயர் துருவன். எந்தவித நவீனத் தொடர்போ சாதி மதச் சாயலோ தெரியாத பெயர். இயற்கையை சுவாசித்து வாழ்கிற பழங்குடி மக்களின் தொன்மத்தை பறைசாற்றுகிற பெயர். படத்தின் முதல் பாடலும் இந்தப் பெயரும் பழங்குடி மக்களின் இருப்பை பிரதானப்படுத்துகிறது. அரசின் இடஒதுக்கீடு போன்ற சமாளிப்பு அல்ல இது. ஒடுக்கப்பட்ட மக்களிடம் இருந்துதான் கிளர்ச்சிகளும் போராட்டமும் பிறக்கும். அந்த வகையில் இந்தப் படம் மிகச்சரியானதொரு திசையில் தான் பயணிக்கிறது என்பதை நீங்கள் ஆரம்பக் கட்ட காட்சிகளிலேயே விளங்கிக்கொள்ள வில்லை என்றால் அதன் பின் உங்களுக்குத் தெரிவது இயக்குனர் அர்ஜுனின் ஜெய்ஹிந்த் தான். அதற்கு எஸ். பி ஜன நாதன் பொறுப்பல்ல.
பண்டப்பரிமாற்றம் எப்படி வியாபாரமாற்று; பணம் எப்படி நுழைந்தது? பதுக்கல் எப்படி நிகழ்ந்தது என்கிறதையெல்லாம் விளக்குகிற விதமாக வெறும் ஐந்தே நிமிடங்கள் வருகிற அந்தக் காட்சியில் இயக்குனரின் தனித்துவம் தெரிகிறது. படம் நெடுகிலும் இன (சாதி அல்ல) ரீதியிலான கேவலப்படுத்துதலுக்கும் அடக்குமுறைக்கும் ஆளாகும் துருவன் எதிர்த்துப் பேசுவதே இல்லை. மிகச்சரியான பாத்திரப்படைப்பு இது. தற்போது புரட்சி முலாம் பூசிக்கொண்டிருக்கும் சில அமைப்புகள் கருத்தியல் ரீதியிலான விமர்சனங்களுக்கு பதில் சொல்ல திராணி இல்லாமல் தனி நபர் வசைகளில் இறங்கி தமது குறைகளை மறைத்துக் கொள்ளும் போக்கையும் இங்கே தொடர்புப்படுத்தி நோக்க வேன்டும். துருவனின் நோக்கம் வேறாக இருக்கும் போது இது போன்ற வன்சீண்டல்களுக்கு பதில் கொடுக்கத் தேவை இல்லை என அமைதி காகிறான். ஒரு சில பெண்களின் சகோதரர்கள் தாக்கும் போது அமைதி காத்தது ஏன் என அந்தப் பெண்கள் கேட்கிற போது துருவன் சொல்பவை இந்த இடத்துக்கும் பொருந்தும். தமிழகத்தின் முதல் மற்றும் ஒரே அசல் சமூகப்போராளியான பெரியார் தன் மீதான விமர்சனங்களுக்கு எப்போதாவது பதில் சொல்லி இருக்கிறாரா? பொதுவாழ்வில் உள்ளவன் அவமானங்களை புறந்தள்ளிவிட்டு இலக்கில் கவனம் செலுத்தச் சொல்கிறார். பெரியார் மேல் ஒருவன் செருப்பை எறிந்து அதற்கு அவர் எதிர்வினை ஆற்றியும் இருந்தால் பெரியார் மேல் அதன் பின் செருப்புகளாக விழுந்து கொண்டிருந்திருக்கும். எல்லாவற்றிற்கும் பதில் சொல்லியே அவரின் காலமும் போயிருக்கும். துருவன் என்பது கண்பத்ராம் போன்ற கழிசடைகளின் கீழ்த்தரமான பேச்சுக்கு மறுபேச்சு பேசும் உணர்ச்சிப்பூர்வமான போலிப்புரட்சியாளர் பாத்திரமல்ல. தத்துவச்செறிவு மிக்க பாத்திரப்படைப்புதான் துருவன்.
அதிகாலை அமைதி என்கிற ருஷ்ய நாவலுக்கு நன்றி தெரிவித்துவிட்டுத் துவங்கும் இந்தப் படம அதே நாவலின் ருஷ்யத்திரைவடிவின் மாறுபதிப்பு எனவும் விமர்சிக்கப்படுகிறது. மறுப்பதற்கில்லை என்ராலும் அது ஒரு பெருங்கேடு இல்லை. சே குவேரா என்ற போராளியின் உண்மையான உள்ளொளியை மறைத்துவிட்டு அவரின் முகவசீகரத்தையும் சாகசத்தை பிம்பமாக்கியும் வியாபாரம் பண்ணுகிற களவாணித்தனம் அல்ல இது. போராட்டக்களத்திற்கென நிறைய ஆயுதங்கள் தேவைப்படுகிற போது முன்னதாக இருக்கிற வார்ப்பை பயண்படுத்திக்கொள்வதில் தவறில்லை. அதுவும் நன்றிகூறலோடு.படத்தின் தேவை மற்றும் பொருத்தப்பாடு இவைதான் முக்கியம் என்கிற போது தழுவல் சாயல் என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.
பிறிதொரு வகையிலும் இந்தப் படம் தமிழின் மிக முக்கியமான படமாகப் படுகிறது. இந்தப் படத்தின் ஐந்து முக்கிய பெண்பாத்திரங்களும் மிகவும் நவீனத்தோடு படைக்கப்பட்டுள்ளன. வெகு இயல்பான உடையலங்காரம் வழக்கமான யுவதிகளின் சிறுகலாட்டாக்கள் இவற்றோடு மேலாக இருபொருட்பன்மொழியில் பேசுகிறார்கள். கவர்ச்சிக்கென உபயோகப்படுத்தப்டும் அல்லது ஒழுக்கங்குறைந்தவர்களாக சித்தரிக்கப்படும் பாத்திரங்களே இது நாள் வரையிலான தமிழ் சினிமாவில் இருபொருட்பன்மொழியில் உரையாடி வந்தனர். முதன்முறையாக இயல்பான யுவதிகள் இருபொருள் மொழிவது இந்தப்படத்தில்தான். அந்தப்பெண்கள் சுயமான போராட்டக்குணமுள்ளவர்கள் எனக்காட்டும் இப்பாத்திரக்குணமே பின்னால் வரும் போராட்டத்துக்கான அர்பணிப்புணர்வை நியாயப்படுத்தும். எல்லாவ்ற்றுக்கும் மேலாக அவர்களின் பெயர்கள். ஆளும் வர்க்கத்தினர் அலறிக்கொன்டு அழித்தொழித்த அவர்கள் மறக்க விரும்புகிற பெயர்களை ஞாபகப்படுத்தும் அந்தப் பெயர்கள் பாராட்டத்தக்கன. இதுபுரியாமல் சிலர் இதிலும் மத உணர்வுகளை தூண்டிவிடும் முகமாக எழுதி வருவதை என்னவென்று சொல்வது? சமுதாய மாற்றத்திற்கான போராட்டங்களும் பெண்விடுதலைக்கான போராட்டங்களும் இருவேறு தடங்களில் பயணிப்ப்வை அல்ல.இந்த நோக்கில் இந்தப்படமும் செல்வது மனதுக்கு உவப்பான ஒன்று.
உலகளாவிய அரசியல் பார்வை தேவை என்பதை இந்தப்படம் சொல்ல வந்த முக்கியக் கருத்தாகப் பார்க்கிறோம். இன்றைய உலகமயமாக்கப்பட்ட சூழலில் எந்த ஒரு நாட்டுக்கெனவும் தனியானதொரு உள்விவகாரம் இருந்துவிட முடியாது. ஒரு நாடு எடுக்கிற அரசியல் முடிவு அந்த நாட்டில் விளைவுகளை ஏர்படுத்துவதோடு நின்றுவிடுவதில்லை. இந்தப் படத்தில் ஒரு காட்சி வருகிறது. மலையுச்சியில் இருந்து பாதாளத்தை நோக்கிய நிலையில் அந்த ஜீப் தொக்கி நிற்கையில் உள்ளே இருப்பவர்களின் ஒவ்வொரு அசைவும் மற்றவர்களை பாதிப்பது போன்றதான நிலையில் தான் இன்றைய உலகம் உள்ளது. ஆகவே உலக நிகழ்வுகள், அரசியல் பொருளாதரம் இவற்றைத்தெர்ற்ந்து கொள்ளாமல் சமூகமாற்றத்துக்கான ஒரு போராட்டத்தில் யாரும் பங்கு கொள்ள முடியாது. உருவாக்கப்பட்ட சித்தாந்தங்கள் முன்னதாக கிடைத்த வெற்றியின் அனுபவங்கள் எதுவும் இன்றைக்கு உதவாஅத நிலையில் உள்ளது. ஈழப்போராட்டத்தில் உலக நாடுகள் ஒதுங்கி நின்றதன் நிர்ப்பந்தம் இதுதான். ஆயுதப்புரட்சியால் விடுதலையான கியூபா ஒன்றும் பேசவில்லை. வெனிசூலா குரல் கொடுக்கவில்லை. பொலிவியா பேசவில்லை. சீனா அப்பட்டமாக உதவியது. இவை எல்லாம் மேலே ஒருபடி போய் இலங்கை அரசைப்பாராட்டின. இந்தியாவோடு சேர்ந்து இலங்கைக்கு ஆதரவாக ஐ. நா சபையில் ஓட்டு போட்டன. இதெல்லாம் அவர்களின் நடைமுறை யதார்த்தங்கள். இப்படியான நிலையில் இந்தப்படம் உள்ளூர்ப் போராட்டங்களின் போதும் உலகளாவிய பார்வை தேவை என்பதை வலியுறுத்துகிறது.
தெருக்கூத்து என்ற கலைவடிவத்தை எடுத்துக்கொள்ளுங்கள். கூத்தாடிகளின் ஒப்பனை ஒரு தேர்ந்த ஒப்பனை அல்ல. கையில் டம்மியான ஒரு அட்டைக்கத்தி முகத்தில் ஜிகினா , தலையில் காகிதக் கிரீடம் இவைதானிருக்கும். ஆனால் கூஹ்தாடியின் கணீர்க்குரலும் துடிப்பான உடலசைவும் பார்ப்பவர்களுக்கு சூரனையே முன் நிறுத்தும். பார்வையாளர்களும் பங்கெடுத்துக்கொள்ளும் இந்தக் கலைவடிவில் வெளித்தோற்றம் கணக்கிலெடுத்துக்கொள்ளப்படுவதில்லை. உள்ளே இருக்கும் கலைஞனின் கலையுயிர்ப்புத்தான் பார்வையாளர்களின் கண்களுக்கு புலப்படும். புறக்காட்சியோ அலங்காரமோ அல்ல. அதேபோல ஜன நாதன் என்றொரு மக்கள் கலைஞன் சுமாரான ஒப்பணையுடன் பேரடர்த்தியானதொரு செய்தியை மறுதலிக்கவே முடியாததொரு திரைப்படமாக தந்திருக்கிறார். முன்முடிபுகளுடன் அணுகுபவர்களுக்கு இந்தப்படம் ஏமாற்றத்தையே தரும். இந்தப் படத்தில் குறைகள் இல்லாமல் இலை. ஆனால் அதற்காக மட்டுமே இதை ஒதுக்கி விட முடியாது. ஜன நாதன் படைப்பியல் ரீதியாக இந்தப் படத்திலுள்ள சிலை குறைகளை பின்வரும் படங்களில் திருத்திக் கொள்ளல் நலம். எல்லோருக்குமான ஒரு அழகியல் தன்மையோடு படம் வரும்போது அதன் வீச்சும் போய்ச்சேரும் பரப்பும் அதிகமாகும். எதிர் நிலை விமர்சனங்களையும் அவர் எடுத்துக்கொண்டிருப்பார் என்றே நம்புகிறோம். இந்தப் படத்தை வரவேற்பவர்கள் பாராட்டுபவர்கள் எல்லோரும் போலியான முற்போக்குணர்வு உள்ளவர்கள் என்ற பொய்யை நிறுவ சிலர் முயன்று கொன்டிருக்கிறார்கள். மணிரத்னம் சங்கர் பாலகுமாரன் போன்ற செத்த ஆடுகளை வெட்டுவதற்காக காலங்காலமாக உபயோகிக்கப்பட்டு முனை மழுங்கிப்ப்போன மொண்ணைக்கத்தியை வைத்திக் கொண்டு பேராண்மையை பகுப்பாய்வு செய்துவிடத்துடிக்கும் அவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள். நாய்கள் குரைத்துக் கொன்டுதானிருக்கும். சூரியனின் பேரொளியொன்றும் மங்கிப்போய்விடுவதில்லை.